பொது கட்டுரை

அம்பேத்காரின் பெண்ணியம்

இன்று சமூக ஒடுக்கு முறைக்கு எதிராக சனநாயகவாதிகளின் ஒற்றை குறியீடு அம்பேத்கார். சமூக ஒடுக்கு முறை என்பது மனிதனை மனிதன் ஒடுக்குவது அது உயர்சாதி-கீழ்சாதி, ஆண்-பெண் மற்றும் ஏழை-பணக்காரன் போன்ற இயங்கியலை கொண்டது.

இன்றைய சுதந்திர இந்தியாவில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சம உரிமை வழங்கும் வகையில் அரசும் நீதி துறையும் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன, அதே சமயத்தில் பாலின சமத்துவத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளில் அரசும் தனியார் அமைப்புகளும் தீவிரமாக இயங்கி வருகின்றன ஆனாலும் பாலின சமத்துவம் என்பது கானல் நீராகத்தான் உள்ளது.

இந்தியாவில் பெண்களின் நிலையை சுமார் 100 வருடங்கள் பின்னோக்கி பார்த்தால் அவர்களின் வரலாறும் விடுதலைக்கான போராட்டத்தையும் அறிய முடியும். இந்திய சமுதாயத்தை பொறுத்தவரை பெண்கள் ஆண்களின் அடிமைகளாகவே நடத்தபட்டனர். அவர்களின் உரிமை நசுக்கப்பட்டு ஒரு வீட்டு விலங்காகவே நடத்தப்பட்டனர் என்ற உண்மையை வரலாற்று ஆய்வாளர்களின் கருத்திலிருந்து பெறலாம்.

பண்டைய இந்தியா, பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சுதந்திர இந்தியா என்ற வேறுபாடில்லாமல் ஆண் பெண்ணை ஒடுக்குதல் நடந்தேறியிருக்கிறது ஆனால் அதன் வீரியம் காலத்திற்கேற்றால்போல் வேறுப்பட்டிருந்தது.

அம்பேத்காரின் சீர்திருத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமானது பெண் விடுதலையும் அதற்க்கான போராட்டமும் ஆகும். அம்பேத்கார் மிக தெளிவாக ஆராய்ந்து இந்திய பெண்களின் வீழ்ச்சிக்கும் அடிமைத்தனத்திற்கும் மிக முக்கிய காரணியாக இந்தியா சாதி அமைப்பு விளங்குகிறது அதை ஒழிக்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்றார்.

பெண்களின் சமூக விடுதலைக்கு எதிரான புனிதங்களை கேள்விக்குட்படுத்தினார் அதை அடித்தும் நொறுக்கினார் அப்படியாக நடந்ததுதான் டிசம்பர் 25 ,1927 ல் மனுதர்ம எரிப்பு போராட்டம். அம்பேத்கார் ஏன் மனுதர்மத்தை எரித்தார் என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியம் ஏனெனில் இந்து மதத்தில் உள்ள பாலின, சாதிய ஏற்ற தாழ்வுகளை ஒரு மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் நிறுவியதையும் அதை புனிதம் என்ற பெயரால் தற்காத்துகொள்வதையும் அறிந்து கொள்ளலாம். அம்பேத்காரின் பெண்ணியத்தை இருபெரும் நிகழ்வைக்கொண்டு அறிந்து கொள்ளலாம் ஒன்று அவர் மனுவுக்கு எதிராக தொடுத்தப் போர் மற்றோன்று இந்து சட்ட மசோதா ஆகும்.

பழைய இந்து சட்டத்தின் மீதான அம்பேத்காரின் தாக்குதலானது இந்து மத அடிப்படைக் கொள்கைவாதிகளை எதிர்ப்பதாக இருந்தது. இந்து வேதங்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் என்ற இரண்டையும் எதிர்மறையாகக் கொண்டு அம்பேத்காரின் கூற்றை ஆராய்ந்து பெண்கள் அனுபவிக்கும் சில சலுகைகளானது அவர் மனு தர்மத்தை தாக்கியதால் உண்டானதே. பெண்களிடம் உள்ள ஆற்றலை ஆண்கள் தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்காகவே உருவாக்கப்பட்டதுதான் பெண்ணறம். அந்த பெண்ணறம் காலப்போக்கில் பெண்களின் கற்புடன் தொடர்புபடுத்தப்பட்டது.

மனுதர்மம் அம்பேத்காரால் ஏன் எரிக்கப்பட்டது?

அம்பேத்கார் மனுதர்மத்தை எரிப்பதற்கான காரணத்தை மகளிரும் மற்றும் எதிர்ப்புரட்சியும் என்ற கட்டுரையிலிருந்து அறிந்து கொள்ளலாம் அவையாவன,

2.213 இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு.எனவே தான் பெண்களுடன் பழகும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.

2.214 பெண்கள் தங்கள் ஆசைக்கும் கோபத்திற்கும் ஆண்களை அடிமையாக்குவதில் வல்லவர்கள்.

2.215 தாய்,மகள்,சகோதரி - எப்பெண்ணுடன் தனிமையில் இருக்கக்கூடாது ஏனெனில் புலன்கள் ஆற்றல் வாய்ந்தவை.

5.151 தன் தந்தை யாருக்கு திருமணம் செய்துகொடுக்கிறாரோ அந்த கணவனுக்கு சாகும்வரை கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். கணவன் இறந்து போய்விட்டாள் அவன் நினைவுடன் காலம் முழுவதும் வாழவேண்டும்.

9.3 பெண்கள் குழந்தை பருவத்தில் தந்தையின் பாதுகாப்பிலும் இளைமையில் கணவன் பாதுகாப்பிலும் முதுமையில் மகனின் பாதுகாப்பிலும் இருக்கவேண்டும். பெண் எப்போதும் சுதந்திரமாக இருக்க தகுதியற்றவள்.

9.14 பெண்கள் அழகை பற்றி கவலைப்படுவதில்லை ஆணாக இருந்தால் போதும் அவள் உடலுறவு கொள்வாள்.

9.46 விற்றுவிட்டாலும் கைவிட்டுவிட்டாலும், கணவனின் பந்தத்திலிருந்து மனைவி விடுபடமுடியாது.

9.416 மனைவி, மகள், அடிமை இம்மூவரும் சொத்துரிமைக்கு அறுகதையரற்றவர்கள். அவர்கள் ஈட்டும் செல்வம் அவர்களின் உரியவருக்கே போய்சேரும்.

இது போன்ற பெண்களின் சுயமரியாதைக்கு எதிராக இருக்கும் மனு தர்மத்தை எரித்ததை அம்பேத்கார் பெருமையாக கருதினார். ஏனெனில் ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிநிலை அந்த சமுதாயத்தில் உள்ள பெண்களின் நிலையை கொண்டே அளவிடப்படும் என்று அவர் உறுதியாக நம்பினார். அம்பேத்காரின் இந்து சட்ட மசோதா அடுத்த கட்டுரையில்.

Follow Us