Sunday 19th of October 2025,
தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்கள் சனாதன தர்மம் குறித்தும், வெடிகுண்டுத் தாக்குதல்களை நியாயப்படுத்தும் வகையிலும் பேசிய பேச்சுக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்து உள்ளார். இதில் ஆளுநர் அவர்களின் தனிப்பட்ட ஆன்மீக எண்ணங்கள் என்பவை அவரது தனிப்பட்ட விருப்பங்கள் ஆகும். அவற்றை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் அரசியல் சட்டத்தின் நீதிநெறிமுறைகளுக்கு உட்பட்ட ஒரு பதவிநிலையில் இருக்கும் ஒருவர் தெரிவிக்கும் கருத்தானது அத்தகைய சட்டத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டதாகத்தான் அமைய வேண்டும். சட்டத்தை மீறியதாகவோ, சட்டத்தை மீறுவதாகவோ அமையக் கூடாது. இதனை ஆளுநர் அவர்கள் நன்கு அறிவார்கள்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “வேற்றுமையில் ஒற்றுமை என நாட்டைப் பற்றி கூறுகிறோம். சனாதன தர்மமும் அதையேதான் கூறுகிறது. இந்தியாவில் ராணுவம், பொருளாதாரம் வளர்ச்சி அடைவதைப்போல ஆன்மீகத்திலும் வளர்ச்சி அவசியம். ஆன்மீகத்தில் வளர்ச்சி இந்தியாவின் வளர்ச்சியாக அமையும்” என்று பேசி இருக்கிறார். இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், அந்த சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வன்முறைப் பாதையை நியாயப்படுத்தியும் பேசி இருக்கிறார்.
''சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதில் இருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம். ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது" என்றும் பேசி இருக்கிறார் ஆளுநர் அவர்கள். இவை அவர் வகிக்கும் அரசியல் சட்டப் பதவிக்கு அழகல்ல.வெடிகுண்டு பாதையே சரி என்கிறாரா ஆளுநர்? யாருக்கு அவர் வழிகாட்டுகிறார்?
''இந்தியா என்பது இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச் சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக உள்ளது'' என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை. மாண்புமிகு ஆளுநரின் உரை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவதாக அமைந்துள்ளது. சமயச்சார்பற்ற தன்மையைப் பிரதிபலிக்க வேண்டிய ஒருவர், ஒரு சமயத்தின் சார்பாளராகக் காட்டிக் கொள்வதையும் தாண்டி - மாற்று மதத்தினர் மீது மனவேறும் மாறுபாடும் கொள்ளக் கூடிய கருத்துக்களையும் - அதனை வன்முறைப்பாதையில் எதிர்கொள்ளலாம் என்ற தூண்டுதலையும் பொதுவெளியில் பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
சனாதனத்துக்கு ஆதரவாகவும், மதச்சார்பின்மைக்கு எதிராகவும் ஆளுநர் தொடர்ந்து பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலமைப்புச் சட்டமும், உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளும் மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர்களே ஆளுநர்கள் என்றுதான் சொல்கிறது. அத்தகைய எல்லையை மறந்தும், மீறியும் ஆளுநர் தனது கருத்தளிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது சரியல்ல. மதவாத, சனாதன, வர்ணாசிரம, வன்முறைக் கருத்துகளை ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு தெரிவிப்பது முறையுமல்ல, சட்டமீறல் ஆகும். அவர் ஏற்றுக் கொண்ட பதவியேற்பு உறுதிமொழிக்கு முற்றிலும் முரணானது ஆகும். எனவே, இப்போது சொல்லிய கருத்தை திரும்பப் பெற்று, இனிச் சொல்லாமல் இருக்கவும் உறுதி எடுக்க ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Fans
Fans
Fans
Fans