இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

சிம்லா- இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு வரும் நவம்பர் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதனை தொடர்ந்து டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தற்போது வரை 55,74,793 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இமாச்சலபிரதேச சட்டசபையில், தற்போது பா.ஜ.,வுக்கு 45 உறுப்பினர்களும், அதைத் தொடர்ந்து காங்கிரசுக்கு 20 உறுப்பினர்களும் உள்ளனர். சட்டசபையில் இரண்டு சுயேச்சைகளும், ஒரு சிபிஎம் எம்எல்ஏவும் உள்ளனர். இத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் களம் காண்பதால் மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி 46 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்த நிலையில் மீதம் உள்ள 12 தொகுதிகளுக்கான முழு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக சார்பில் போட்டியிடும் 62 தொகுதிகளுக்காண வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே நேரடி போட்டி நடைபெற வாய்ப்புள்ளது. முதன் முறையாக ஆம் ஆத்மி கட்சியும் களம் காண்பதால் போட்டி மிக கடுமையக இருக்கும் என்று எதிர் பார்க்க படுகிறது.