டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி.

புது டெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த நம்பிக்கைத் தீர்மானம் எதிர்பார்த்த படி வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 62 எம்எல்ஏக்களில் 58 பேர் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாகவும் எம்எல்ஏக்கள் பாஜக கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக வெளியான தகவல் ஆம் ஆத்மி கட்சியினரை திடுக்கிடச் செய்தது.

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களுக்கு சுமார் 800 கோடி ரூபாய் வரை விலை பேசப்படுவதாகவும், டெல்லியில் கெஜ்ரிவால் ஆட்சியை கவிழ்க்க பல்வேறு இடையூறுகளை பாஜக பகிரங்கமாக செய்வதாகவும் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. இதில் கலந்துகொண்ட பாஜக எம்எல்ஏக்கள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி கூச்சலிட்டனர். இதனிடையே அரசின் மீது நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் நடத்துவதற்கு அர்விந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். இந்த வாக்கெடுப்பில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.