இறையாண்மை - மதச்சார்பின்மை - ஜனநாயகம் - ப.சிதம்பரம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றுள்ள இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய மூன்று வார்த்தைகள் வாசகர்களுக்கு நினைவிலிருக்கும். நவீன இந்தியக் குடியரசை வரையறுக்கும் பண்புகளே அந்த வார்த்தைகள். அத்தகைய குடியரசை உருவாக்கத்தான் 1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா சுதந்திரம் பெற்றது.

இந்திய சுதந்திரத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிகழ்வை நாடு கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அப்படியே நூறாவது ஆண்டு சுதந்திர தினத்தையும், அதற்குப் பிறகு வரும் சுதந்திர தினங்களையும் கொண்டாடும் வகையில் இந்தியா தொடர்ந்து ஜனநாயக நாடாகவே திகழும் என்று நிச்சயம் நம்புகிறேன். இருந்தாலும் மிகுந்த மன நடுக்கத்துடனேயே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன் – இந்தியக் குடியரசு 2047வது ஆண்டில் இறையாண்மை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய தன்மைகளுடன் இருக்குமா?

உதிர்கிறதா மக்களின் அதிகாரம்?

பல நூற்றாண்டுகளாக இந்தியா இறையாண்மை மிக்க நாடாகவே இருந்தது – எப்படி என்றால், வெளிநாடுகளைச் சேர்ந்த ராஜாக்களும் ராணிகளும் இந்தியாவை ஆண்டதில்லை. ஆட்சியாளரை மாற்றக்கூடிய அதிகாரம்தான் இறையாண்மை மிக்க மக்களின் தனிச் சிறப்பு. நேர்மையான – சுதந்திரமான தேர்தல் நடைமுறைகள்தான் மக்களுடைய இறையாண்மை மிக்க உரிமை. சமீபத்திய ஆண்டுகளில் தேர்தல்கள் குறித்தே சந்தேகங்கள் வளர்ந்து வருகின்றன. தேர்தல் முடிவுகளைப் பண பலம்தான் தீர்மானிக்கிறது, பாரதிய ஜனதா கட்சிதான் பண பலத்தில் பெரிய கட்சியாக விளங்குகிறது.

அரசியல் கட்சிகளுக்குக் கிடைக்கும் நன்கொடைகளில் 95%ஐ கைப்பற்றும் வகையில், வஞ்சகமாகத் திட்டமிட்டு தேர்தல் நன்கொடைப் பத்திரம் என்கிற புதிய – மூடுமந்திரமான வழிமுறையை பாஜக அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதுவல்லாமல் தேர்தலில் வெற்றி பெற வேறு சில உத்திகளையும் சாதனங்களையும் பாஜக கையாள்கிறது: நடுநிலையாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் அடக்கிப் பணியவைக்கப்படுகின்றன. நிறுவனங்கள் கைப்பற்றப்படுகின்றன. சட்டங்களே ஆயுதங்களாக மாற்றப்படுகின்றன. பல்வேறு முகமைகள் சட்ட விரோதமாக நடக்குமாறு நெருக்கப்படுகின்றன.

அப்படியே ஒருவேளை பொதுத் தேர்தல்களில் தோற்றுவிட்டாலும், ‘தாமரைச் செயல்திட்டம்’ மூலமாக ஆட்சி கைப்பற்றப்படுகிறது. இப்படித்தான் வெட்கமின்றி கோவா, மணிப்பூர், அருணாசல பிரதேசம், மேகாலயம், கர்நாடகம், மத்திய பிரதேசம் ஆகியவற்றில் அது ஆட்சியைப் பிடித்தது. ராஜஸ்தானில் பிடிக்க முயற்சி செய்தது.