Sunday 19th of October 2025,
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 தேதி முதல் பிரச்சாரம் தொடங்கப்படும் என்று பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திகாத் தெரிவித்துள்ளார். மேற்கு உத்தரபிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பேசிய திகாத், ”அக்னிபத் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு மற்றும் உத்தரபிரதேச அரசுடன் இன்னும் சண்டையை தொடங்கவில்லை” என்று கூறியுள்ளார்.
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாக பிரச்சாரம் நடைபெறும்” என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு நடந்த விவசாய சங்கத்தினர் போராட்டங்களை அடுத்து விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் பழைய வழக்குகளை காவல்துறை போடப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். லக்னோ மற்றும் டெல்லியில் உள்ளவர்கள் இதை கவனமாக கேட்க வேண்டும் என்று கூறிய அவர், “நீங்கள் அரசியல் கட்சிகளை உடைக்க முடியும், விவசாயக் குழுக்களின் தலைவர்களை நீங்கள் பிரிக்கலாம், ஆனால் விவசாயிகளை உடைக்க முடியாது. விவசாயிகள் உங்களுக்கு (இரண்டு அரசாங்கங்களுக்கும்) எதிராக போராடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.