Thursday 15th of January 2026,
நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்த நேற்றைய விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரை. அன்றாடத் தேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு நம் நாட்டு மக்களை மெதுவாகக் கொல்லும் ஒரு விஷம் ஆகும். உணவு தானியங்களின் விலை 7.56 சதவீதமும், குறிப்பாக காய்கறிகள் 17.37 சதவீதமும், மசாலாப் பொருட்களின் விலை 11.04 சதவீதமும், சமையல் எண்ணெய் மற்றும் வெண்ணெய் விலை 9.36 சதவீதமும் அண்மையில் உயர்ந்துள்ளது.
பணவீக்க விகிதம் 2 முதல் 6 சதவிகிதம் வரை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியின் இலக்கு இருந்தபோதிலும், பணவீக்க விகிதம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சாதாரண குடிமக்கள் இப்போது விலைவாசி உயர்வு என்கிற தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வு பெரும்பாலும் அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கிறது.
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் சூறையாடப்படுகிறது. மீனவ சமூக மக்களும் தங்கள் கைவினைப் படகுகள் மற்றும் இழுவை படகுகளுக்கு டீசலைப் பயன்படுத்துவதால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். கடலில் கடினமான வானிலை வெளிப்படும் நேரங்களில் மீன் பிடித்தும், சில சமயங்களில் வெறுங்கையோடும் மீனவர்கள் திரும்ப வேண்டியது இருக்கும். நடுக்கடலில், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளை தாக்கி துன்புறுத்துவதும் அச்சுறுத்துவதும் வாடிகக்கையாக உள்ளது. சில சமயங்களில் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்டு உள்ளார்கள்.
பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பெட்ரோல் விலையை உயர்த்துகிறோம் என்று ஒன்றிய அரசு சாக்குப்போக்கு கூறி வருகிறது. ஆனால் 50 சதவீதத்திற்க்கும் அதிகமான கலால் வரி மற்றும் சுங்க வரி ஆகியவற்றைக் குறைக்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விகிதத்தை ஒன்றிய அரசு அண்மையில் சிறிதளவு குறைத்துள்ளது. பெட்ரோல் விலையை 5 ரூபாய் குறைத்துள்ளது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் இந்த நிவாரணம் சாமானிய மக்களுக்கு ஒரு அடையாள நிவாரணம் மட்டுமே ஆகும்.
அரிசி, கோதுமை, பால் மற்றும் பால் பொருட்கள் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஒன்றிய அரசு ஜிஎ°டி வரி விதித்துள்ளது அவமானமாகும். இது பொருளாதாரத்தில் தொடர் பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவமனையில் வாடகைக்கு எடுக்கப்படும் ஐசியூ அறைக் கட்டணத்துக்குக் கூட வரி விதிக்கப்படுகிறது. வரி விதிப்பில் ஒன்றிய அரசு துரதிஷ்டவசமாக யாரையும் எதனையும் விட்டுவைக்கவில்லை.
தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் காரணமாக, எண்ணெய் இறக்குமதி கட்டணம் உட்பட அனைத்து இறக்குமதி பொருட்களும் விலை உயர்ந்து வருகின்றன. எனவே, உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎ°டி வரியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பால் மற்றும் பால் பொருட்கள் மீதான வரியையும் திரும்பப் பெற வேண்டும். சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் மீதான சுங்கம் மற்றும் கலால் வரியை கணிசமாகக் குறைக்க வேண்டும். ஒன்றிய அரசு, எல்பிஜி சிலிண்டர்களின் விலையை 2014 இல் இருந்த விலையையே நிர்ணயிக்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும், பொதுமக்களின் அன்றாடத் தேவைகளையும் கண்காணித்து கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். .