”ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா பத்திரிக்கை சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்தியா என்பதை வெறும் நிலப்பரப்பின் எல்லைகளாக நாம் கருதக் கூடாது. இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல. பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியம்தான் இந்திய அரசு. ஒன்றியம் - யூனியன் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திய ஒன்றியத்துக்குள் உள்டங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும்.மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும்.

இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது.ஏனென்றால் இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன.இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவர்க்குமான மதமாக இருக்க முடியாது.ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை.உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ - நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான்.

ஒற்றை மொழியை - ஒற்றை மதத்தை - ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள். இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள். இந்திய மக்களின் எதிரிகள். இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது.அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். மேலும் ”ஒரே நாடு, ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள்”: என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.