Sunday 19th of October 2025,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயின்றுவந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 13ம் தேதி மர்மமான உயிரிழந்தார். பள்ளியின் மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாக தரப்பில் கூறப்படுகிறது. எனினும், மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக, மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு கடந்த 17ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி, தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டதோடு மேசை, நாற்காலி போன்றவற்றை போராட்டக்காரர்கள் எடுத்து சென்றனர். பள்ளி மாணவர்களின் சான்றிதழ்கள் தீ வைக்கப்பட்டன.
சென்னை உயர்நீதிமன்றம் இந்த வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. கலவரக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டது. 300க்கும் மேற்பட்டோர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று, போராட்டத்தின் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் உள்ளதாக உளவுத்துறை கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும்வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும் அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது.
மேலும், ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், ‘அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் மாணவியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது’ என தெரிவித்துள்ளார்.
நன்றி மெய்யறிவு இனைய தளம் https://www.meiarivu.com/2022/07/26/கள்ளக்குறிச்சி-பள்ளி-வன்/