விலைவாசி உயர்வை எதிர்த்து கோஷம் -19 எம்பிக்கள் பேர் சஸ்பெண்ட்

விலைவாசி உயர்வை எதிர்த்து மாநிலங்களவையில் கோஷம் எழுப்பிய 6 திமுக எம்பிக்கள் உள்பட 19 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பாராளுமன்ற இரு அவைகளும் 7வது நாளாக முடங்கின. விலைவாசி உயர்வை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில், தொடர் அமளி காரணமாக பாராளுமன்றம் 7வது நாளாக நேற்றும் முடங்கியது.

இந்நிலையில், மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் மீண்டும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கிய போதும் இவர்களின் எதிர்ப்பு தொடர்ந்தது. அவையின் மையப்பகுதிக்கு சென்று விலைவாசி உயர்வை கண்டித்து கோஷமிட்டனர். இதனால், இந்த எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யக் கோரும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முரளீதரன் கொண்டு வந்தார்.

கடும் கூச்சல் குழப்பத்திற்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, திமுகவைச் சேர்ந்த எம்.எம். முகமது அப்துல்லா, கல்யாண சுந்தரம், கிரிராஜன், என்.ஆர்.இளங்கோ, எம்.சண்முகம் மற்றும் கனிமொழி என்விஎன் சோமு ஆகிய ஆறு எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 7 எம்பிக்கள், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் 3 எம்பிக்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் 2 எம்பிக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்பி என மொத்தம் 19 எம்பிக்கள் இந்த வாரம் முழுவதும் (வரும் வெள்ளிக்கிழமை வரை) சஸ்பெண்ட் செய்யப்படுவதாக, அவைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பி.க்கள் அவையை விட்டு வெளியேறாமல், தரையில் அமர்ந்து தொடர்ந்து கோஷமிட்டனர். அவைத்தலைவர் பலமுறை அவர்களை எச்சரித்தும் வெளியேறவில்லை. அதோடு மற்ற எதிர்க்கட்சி எம்பிக்களும் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு, சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால், அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்ட பின்னர், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மக்களவை நேற்று காலை கூடியதும், விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி தொடர்பாக விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தன. இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், கடும் அமளி ஏற்பட்டது.

இதன் காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 காங்கிரஸ் எம்பிக்களும், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவையில் மக்கள் பிரச்னையை எழுப்பியதற்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் எதிர்ப்பை பெற்றுள்ளது. ஆளும் தரப்பின் இந்த செயல்பாட்டை கண்டித்து நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பப்படும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கூறி உள்ளனர்.