Thursday 15th of January 2026,
புது டெல்லி: பாராளுமன்ற மக்களவையில் விலைவாசி உயர்விற்கு எதிராக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, மாணிக்கம்தாகூர் உட்பட 4 பேரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு பிறப்பித்துள்ளார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாராளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் மக்களவையில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாக, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகியோர் எஞ்சியுள்ள கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார். இதனிடையே பாராளுமன்ற அவைக்குள் பதாகை, பேனர்களுடன் வருவோர்க்கு அனுமதி இல்லை என்றும் சபாநாயகர் எச்சரித்துள்ளார்.