Thursday 15th of January 2026,
மேற்குத் தமிழகத்தை கதைக்களமாக வைத்து இதுவரை சாதி பெருமை பேசும் படங்களே திரையை ஆக்கிரமித்து வந்துள்ளது. எஜமான் , நாட்டாமை, சூரிய வம்சம், சின்ன கவுண்டர், சதி லீலாவதி , நட்புக்காக ஆகிய திரைப்படங்கள் எல்லாம் கொங்கு மண்டலத்தை அடிப்படையாக வைத்தே எடுக்கப்பட்டது.
கிராமத்தையும் விவசாயத்தையும் உயர்வாகவும் நகர வாழ்க்கையை ஏளனம் செய்தும் இந்த திரைப்படங்கள் அமைந்திருக்கும். மரபு வாழ்க்கை முறையை உயர்வாகவும் நவீன வாழ்க்கை முறையை எதிர்மறையாகவும் அணுகும் ‘மண்வாசம்’ வீசும் திரைப்படங்களாக இது போன்ற திரைப்படங்களே திகழ்ந்தது. சாதியை, நிலஉடமையை, நாட்டாமை தனத்தை எல்லாம் உயர்ந்து பேசிய இத்தகைய படங்கள் மத்தியில் இதற்கு விதிவிலக்காக அந்த சமயத்தில் வெளிவந்த ஒரே படம் "சேரன் பாண்டியன்".
சமீபத்தில் வெளியான ‘சேத்துமான்’ திரைப்படம் மேற்கு தமிழகத்தின் மறுபக்கத்தை வெளிச்சமிட்டு காட்டுகிறது. பெருமாள் முருகன் எழுதிய "வறுகறி" என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், ஒரு சினிமாவாக இது அந்த சிறுகதைக்கு நியாயம் செய்துள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த படத்திற்கான வசனத்தையும் பெருமாள் முருகனே எழுதியுள்ளார். கதைக்கு தேவையான வசனத்தை தெளிவாக பேசியிருப்பது திரைப்படத்தை மேலும் மெருகேற்றியுள்ளது. வானொலியில் ஒலிக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்த அறிவுப்புடனே திரைப்படம் தொடங்குகிறது, ஒரு கட்டடத்தில் இந்தியாவின் 14 ஆம் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்க பட்டுள்ள செய்தி ஒலிக்கிறது. படத்தின் கதையோடு இந்த அறிவிப்பையும் இயக்குனர் தொடர்புபடுத்துகிறார். ஒரு தலித் ஜனாதிபதியாகவே ஆனாலும் அவர்களின் நிலை மாறவில்லை என்பதை அறிவித்தபடியே கதை நகர்கிறது.
தாத்தா பெயரன் ஆகியோருக்கு இடையிலான பாச பிணைப்பை திரையில் காட்டும் விதம் அருமை. தாய் தந்தையை சாதிய வன்மத்தின் காரணமாக இழந்த கதையை தாத்தா சொல்லும்போது, அந்த பகுதியில் தலித்துகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதும் வெளிப்படுகிறது.
அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் அனைவரும் உயர்சாதிகளாக இருப்பதால் அந்த பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், அங்கு சாதி எப்படி வேலை செய்கிறது என்பதெல்லாம் சமீபத்தில் தமிழ்நாட்டு பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு கட்டியம் கூறுவதை போல் அமைந்துள்ளது. கல்வி நிறுவனங்களிலும் சாதி உயிர்ப்புடன் இருக்கும் காரணத்தால் தான் இன்றுவரை கல்வியால் கூட சாதியை ஒழிக்க முடியவில்லை.
ரங்கன் என்ற கதாபாத்திரம் சமகால தலித்துகள் சந்தையின் மூலம் பெற்றுள்ள சமூக விடுதலையை குறிப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. பூச்சியப்பன் (தாத்தா) கதாபாத்திரம் இதற்கு மாறாக தனது பண்ணை முதலாளி நிகழ்த்தும் சாதிய இழிவுகளை பொறுத்துக்கொண்டு பெரிதும் மதிக்கும் ஒரு மனிதராக வடிவமைக்கப்பட்டுள்ளது. தலித் எழுச்சி இயக்கத்தின் மூலம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சுவடுகளாக இருவரிடையே நிலவும் முரண்களை குறிப்பிடலாம்.
பன்றியை சேத்துமான் என்று குறிப்பிடும்போது அழகியல் உருவாக்கம் பெறுகிறது. தாங்கள் சார்ந்து வாழும் ஒரு உயிரை அல்லது பொருளை மனிதர்கள் எவ்வளவு நேசிப்பார்கள் என்பது கட்டப்பட்ட விதம் அருமை. அதிலும் அடுத்தநாள் காலை கறியாக போகும் பன்றியை 'ராசா' என்று கூறி அதை கட்டி தூக்கிச்செல்லும் போதில் "பல்லக்கில் ராசா வரான்' என்றும் சொல்லும்போது அந்த திரை உட்பட அனைத்தும் அழகால் நிரம்பி வழிகிறது.
பன்றி கறிக்கு ருசிபிடித்து அலையும், ஆனால் குடும்பத்திற்கு தெரியாமல் உண்ணவேண்டிய நிர்பந்தங்களை கொண்ட வெள்ளக்கவுண்டர் என்கிற வெள்ளையப்பன் கதாபாத்திரம் அந்த பகுதியில் வசிக்கும் உயர்சாதி ஆண்களின் பண்புகளை பிரதிபலித்தவண்ணம் இருக்கிறது. ஆனால் பூச்சியப்பனை சில இடங்களில் நல்லமுறையில் நடத்துபவராகவும் சில காட்சிகளில் தென்படுகிறார். "மரம் போனா மானம் போச்சு" என்று தொடங்கும் பங்காளி பிரச்சனை கடைசியில் இதெற்கெல்லாம் சம்மந்தம் அற்ற ஒரு நபரின் மரணத்தில் முடியும்போது மனம் பதைபதக்கிறது.
நிலவுடைமை சமூகத்தில் சாதி சார்ந்த உறவுகள் எப்படி செயல்படுகிறது என்பதை இத்திரைப்படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது. அத்தகைய சாதி அமைப்பில் சுரண்டல் முறை இயங்கும் விதமும் இதில் பேசப்பட்டுள்ளது. யதார்த்தத்தை ஒட்டி கதைக்களம் அமைந்திருப்பது அந்த கதைக்கு வலுவை கூடியுள்ளது.
இந்தாண்டு வெளிவந்த சாதி எதிர்ப்பு சினிமாக்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் சேத்துமானும் அடங்கும் என்பது நிச்சயம். இயக்குனர் தமிழுக்கும் கதை ஆசிரியர் பெருமாள் முருகனுக்கும் வாழ்த்துகள் !
Fans
Fans
Fans
Fans